பெண்களின் ஆடை அளவில் ஏன் இந்த முரண்பாடு?

அன்று:
ஓர் ஆண் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது குறித்து இறைத் தூதர் எச்சரித்ததைப் பொருட்படுத்தாமல் ஆண்கள் கரண்டைக்காலுக்கு கீழ் ஆடை அணியலாம் என்று ஆண்களின் ஆடை அளவில் PJ அவர்கள் மாற்றிப் பேசினார்.

இன்று:
பெண்கள் கரண்டைகால் வரைதான் ஆடை அணியவேண்டும் அதற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்று பெண்களின் ஆடை விஷயத்தில் மாற்றிப் பேசுகிறார். பெண்கள் தங்களது முகம், கை ஆகியவற்றைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் மறைக்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் தனது மொழி பெயர்ப்பில் முன்பு எழுதியிருந்த PJ, இன்று அதற்கு முரண்பட்டு எழுதும் போதும் வேடிக்கை பார்க்கும் TNTJ அறிஞர்களே! ஆண்களின் ஆடைச் சட்டத்தை மாற்றும் போது மௌனம் காத்தீர்கள். இன்று பெண்களின் ஆடை சட்டம் மாறுகிறது. இறைமார்க்கத்திற்கு முரண்பட்ட கருத்துக்களை எடுத்து வைக்கும் போது மௌனிகளாக இருப்போர் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்காது என்ற எண்ணமா?

இஸ்லாத்தின் பெயரால் பெண்களின் ஆடை சட்டத்தை இவர்கள் கூறிவருவதால், குர்ஆன், நபிமொழிகளின் பார்வையில் இதன் நிலை என்ன? என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.


தொடையின் பெரும் பகுதி திறந்த நிலையில் ஒர் ஆண் ஆடை அணிந்து தொழுதால் அவனை எந்த வகையிலும் குறை கூற முடியாது என்று ஆண்களின் ஆடைக் குறைப்புச் சட்டத்தை சமீபத்தில் ஏகத்துவத்தில் (ஜுலை-2005) வெளியிட்டிருந்தார்கள். இச்சட்டத்திலுள்ள இவர்களது அறியாமையையும், குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக எழுதியிருந்ததையும் தக்க சான்றுகளோடு தெளிவாக விவரித்திருந்தேன். (அல்ஹம்துலில்லாஹ்).


மார்ச் மாதம் (2005) பிரச்சாரத்திற்காக இலங்கை சென்றிருந்த இவர்கள், ஓர் இஸ்லாமியப் பெண் அணிந்து கொள்ளவேண்டிய ஆடையின் அளவு குறித்து தங்களது அறியாமையை மார்க்கமாக்கியது கண்டு இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள் அதிர்ச்சியடையாகாமல் இருக்க முடியாது.


எனவே, பெண்களது ஆடை விவகாரத்தில் இவர்கள் கூறியது என்ன? அதில் வெளிப்பட்ட இவர்களது அறியாமை என்ன? குர்ஆன், சுன்னாவிற்கு எவ்விதத்தில் எதிராக உள்ளது? ஆகியவற்றைத் தெளிவுபடுத்த வேண்டியது மார்க்கம் அறிந்த அறிஞர்களது கடமை என்றுணர்ந்ததால் இதனை இப்போது ஆய்வுக்கு எடுத்துள்ளேன்.

ஒரு பெண் காலுறை அணிந்து பாதங்களை மறைத்துக் கொண்டுதான் தொழ வேண்டுமா?
என இலங்கையிலுள்ள கொழும்பு நகரில் டவுன் ஹால் என்ற இடத்தில் நடந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியில் ஒரு பெண் எழுப்பிய கேள்விக்கு கீழ்கண்டவாறு பதிலளித்த பி.ஜே. அவர்கள், வினோதமாகவும், குர்ஆன் சுன்னாவிற்கு முரணாகவும் தனது அறியாமையை மார்க்கமாக்கியுள்ளார்.

 

عن بن عمر قال قال رسول الله  - من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة فقالت أم سلمة فكيف يصنعن النساء بذيولهن قال يرخين شبرا فقالت إذا تنكشف أقدامهن قال فيرخينه ذراعا لا يزدن عليه. (الترمذي, النسائي, أحمد, إبن ماجة, أبو داود)


நபி (ஸல்) அவர்கள்:
"தனது ஆடையை யார் (கரண்டைக்குக் கீழ்) பெருமையாக இழுத்துச் செல்கின்றானோ அவனை மறுமையில் அல்லாஹ் பார்க்க மாட்டான்"

உம்மு சலமா (ரலி) அவர்கள்:
பெண்கள் தங்களது கீழாடையை எவ்வாறு அணிய வேண்டும்?"

நபி (ஸல்) அவர்கள்:
"அவர்கள் ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்"

உம்மு சலமா (ரலி) அவர்கள்:
"அவர்களது பாதங்கள் அப்போது வெளிப்படுமே?"

நபி (ஸல்) அவர்கள்:
"அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும். அதற்கு மேல் அதிகப்படுத்த வேண்டாம்"
(அறிவிப்பவர்: இப்னு உமர், நூல்: திர்மிதி, இப்னு மாஜா, நஸாயி, அஹ்மத், அபூ தாவூத்)


PJ அவர்கள் மேற்கண்ட இந்த நபிமொழியைக் கூறிவிட்டு, தமது சொந்தக் சரக்கை இதில் புகுத்தி அதை விவரித்துள்ளார். அதாவது, பெண்கள் ஒரு ஜான் இறக்க வேண்டும் என்று கூறிய இறைத்தூதர் எதிலிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்பதற்கான ஆரம்பப் புள்ளியைக் (Starting Point) குறிப்பிடவில்லையாம்.


அதனால், எதிலிருந்து ஒரு ஜான்?


- இடுப்பிலிருந்தா?
- தொடையிலிருந்தா?
- முட்டுக் காலிலிருந்தா?
- கரண்டைக் காலிலிருந்தா?


என்று வினோதமான கேள்விகளை தன்னுடைய விளக்கத்தின் ஊடே எழுப்பிவிட்டு, அதற்கு பதிலாக,
"கரண்டைக்காலிலிருந்துதான் ஒரு ஜான்" என்று புரிந்து கொள்ள முடியாது, ஏனெனில், கரண்டைக்காலிலிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்றால், நிச்சயமாக பாதங்கள் மறைந்துவிடும் என்பதால் "பாதங்கள் அப்போது வெளிப்படுமே" என்ற கேள்வியை உம்மு சலமா (ரலி) அவர்கள் எழுப்பி இருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்.


மேலும், ஆடையைக் கரண்டையிலிருந்து ஒரு முழம் இறக்கினால் ஆண்களும் சரி, பெண்களும் சரி, நடக்க இயலாமல் கால் தடுக்கி கீழே விழுந்து விடுவார்கள். ஆதலால் 'கரண்டைக் கால்' என்பது ஆரம்பப் புள்ளியாக (Starting Point) இருக்க முடியாது என்கிறார்.

ஒரு ஜான் என்பதற்கான ஆரம்பப் புள்ளி (Starting Point) முட்டுகால்கள் என்று வைத்துக் கொண்டால் அப்போது பாதங்கள் வெளியே தெரிவது என்பது நிச்சயம். அன்னை உம்மு சலமா (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியதும் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். எனவே, முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் என்றுதான் இந்த நபி மொழியைப் புரிந்து கொள்ள வேண்டும் அதாவது, எதுவரை ஆண்களுக்குக் மறைப்பது கட்டாயமோ அதிலிருந்து ஒரு முழம் இறக்க வேண்டும் என்றே இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ள வேண்டும். முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் என்றால் அது சரியாக் கண்டைக் காலை தொடும், மேலும் ஒரு முழத்தை விட அதிகப்படுத்தக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளதால், பெண்கள் கரண்டைகால்கள் வரைதான் ஆடை அணிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் கீழாடையை அதிகப்படுத்தி தங்களது பாதங்களை மறைக்கக் கூடாது என்று (பெண்கள் கரண்டைகால்களுக்குக் கீழே ஆடையை இறக்கி அணிந்து கொள்வது இறைவனிடம் தண்டனையைப் பெற்றுத் தரும் மாபெரும் குற்றமாகும் என்ற ரீதியில்) P.J. கூறியுள்ளார்.


Click here to play Video Clip (RealPlayer)

(மேற்கண்ட நிகழ்ச்சியின் வீடியோ கோப்பை பார்வையிட இங்கு சொடுக்குங்கள்).

 

அதாவது கீழாடையை கரண்டைகளுக்கு கீழே இறக்கக் கூடாது என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம்தான் என்று இதன் மூலம் சொல்ல வருகிறார். இதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள் கேள்வி கேட்டு, ஒரு ஜான் ஒரு முழம் என்ற நீண்டதொரு விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் ஏன் கொடுக்க வேண்டும்?. முதல் கேள்விலேயே ஆண், பெண் ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான சட்டம்தான் என்று அழகாக இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கலாமே?


ஒரு முழம் இறக்கவேண்டும் என்ற இந்த நபிமொழியை மற்றவர்கள் ஓரங்கட்டி விட்டார்களாம். இவர் அதைக் கண்டு பிடித்துவிட்டாராம்.(?) ஏதோ இவர்தான் இந்த நபிமொழியை கண்டுபிடித்துவிட்டது போல் கருதி பெண்கள் தங்களது பாதங்களை மறைத்துக் கொள்வது நபிவழியல்ல என்று தனக்குத் தானே முரண்பட்டு கருத்துக் கூறியுள்ளார். பெண்களின் ஆடை குறித்து இந்த ஒரு நபிமொழிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது போல் சித்தரித்து, தொடர்புடைய மற்ற நபிமொழிகளை இருட்டடிப்புச் செய்து விட்டு, இந்த நபிமொழியை தனது மனம்போன போக்கில் விவரித்துள்ளார். இது குறித்து வந்துள்ள பல்வேறு நபிமொழிகளை இருட்டடிப்புச் செய்து ஓரங்கட்டிவிட்ட இவர், வழக்கம் போல் பிறர் மீது பழி போட்டுப் பேசியுள்ளார்.

பழைய செய்தி (இலங்கையில் மார்ச் 2005-ல்)


இவர் இந்த நபிமொழிக்கு அளித்த விளக்கத்தின் படி ஆண்கள் எதுவரை மறைப்பது கட்டாயமோ அதன் இறுதியிலிருந்து பெண்கள் ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்று கூற வருகிறார். ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டியதன் இறுதி எல்லை முட்டுக்கால்களாகும் என்று கூறிவந்த பழைய செய்தியின் அடிப்படையில் வகுத்துக் கொண்ட சட்டமாகும் இது.

இதன் பிறகு வெளியிட்ட இவர்களின் (2005) ஜுலை மாத ஏகத்துவ இதழில், ஆண்களின் ஆடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருகிறார்கள். அதாவது, ஆண்கள் கட்டாயம் மறைத்துக் கொள்ள வேண்டிய அளவு தொடையின் சிறிய பகுதிதான் என்று சட்டத்தை மாற்றுகின்றார்.

 

முட்டுகால்கள் வரை மறைப்பது கட்டாயம் என்ற இந்த பழைய சட்டம் கடந்த 2005 ஜுன் மாத இறுதியோடு காலாவதியாகிவிட்டதால், "பெண்கள் முட்டுக்காலிலிருந்து ஒரு முழம் இறக்கி கரண்டைக்கால்கள் வரை ஆடை அணிந்து கொள்ளவேண்டும்" என்ற இச்சட்டமும் 2005 ஜுன் மாதத்தோடு காலாவதியாகிவிடுகிறது.


புதிய செய்தி:

ஆண்கள் கட்டாயம் மறைத்துக் கொள்ள வேண்டியது தொடையின் சிறிய பகுதி மட்டுமே என்பது இவர்களின் புதிய சட்டமாகும். இவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட இப்புதிய சட்டம் 2005 ஜுலை மாதத்திலிருந்து அறிமுகம் செய்யப்படுகின்றது. (பார்க்க: ஏகத்துவம் மாதஇதழ், ஜுலை-2005)


திருத்தம் செய்யப்பட்ட இப்புதிய ஆடை விதியின்படி, பெண்கள் ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்றால், ஆண்கள் மறைப்பது கட்டாயமாகவுள்ள தொடையின் சிறிய பகுதியிலிருந்து ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முழத்திற்கு மேல் அதிகப்படுத்தக் கூடாது என்ற இறைத்தூதரின் கண்டிப்பான கட்டளையிருப்பதால், முட்டுக்கால்கள் வரை மறைக்கும் விதத்திலான குட்டைப் பாவடைகளை மட்டுமே பெண்கள் அணிந்து கொள்ள வேண்டும். (இவர்கள் புரிந்துக்கொண்ட கருத்தின்படி) அதற்கு மேல் அதிகப்படுத்துவது நபிவழிக்கு எதிரானது(?) என்றாகிவிடும்.


அதாவது மேலைநாட்டு ஆடவர்களின் அசிங்கமான அரைக்கால் டவுசர் கலாச்சாரத்திற்கு இறைத்தூதரே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகச் சித்தரித்து, தொழுகை சட்டத்திலும் அதைச் சம்பந்தப்படுத்தி திருப்தி பட்டுக்கொண்ட இவர்கள், திடீரென பெண்கள் ஆடையின் பக்கமும் கவனம் செலுத்தி, மேலை நாட்டுப் பெண்களின் அசிங்கமான குட்டைப் பாவாடைக் கலாச்சாரத்தை இறைத்தூதர் காட்டிய இஸ்லாமியக் கலாச்சாரமாகச் சித்தரித்து, தங்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றி வருவோரை நம்ப வைக்கும் ஆரம்ப முயற்சியே இது. இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலோ அல்லது அவர்களை கண்மூடி நம்பும் கூட்டம் இவரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று அறிந்துக்கொண்ட பிறகோ, இவ்விளக்கத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஜமாஅத்தின் முடிவாக வெளியிட தயங்க மாட்டார் என்பதைத்தான் இவரின் முந்தைய ஜகாத் விஷயத்தை வைத்து விளங்கிக்கொள்ள முடிகிறது.


ஏன் இது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கீழாடையால் பெண்கள் தங்களது பாதங்களை மறைப்பது குற்றமா?


20 ஆண்டுகளுக்கு மேலாக ஹதீஸ்கள் குறித்து ஆய்வு செய்துவருவதாகக் கூறிவரும் இந்த மேதைக்கு, ஒரு முழம் இறக்கிக் கொள்ளவேண்டும் என்ற இறைத்தூதரின் கூற்றை மற்ற நபிமொழிகளின் துணையோடுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல், சுன்னாவின் அடிப்படையில் விளக்கமளித்த மற்ற அறிஞர்களது கூற்றுக்களை திரும்பிக் கூட பார்க்க வேண்டிய தேவையே இல்லை என்று தப்பட்டம் அடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது மனோச்சையின் படி விளக்கம் அளித்து, முன்னுக்குப் பின் முரண்பட்டு பேசிவிட்டு அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்.


எனவே, ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும் என்ற இந்த நபிமொழியை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை மற்ற நபிமொழிகளின் ஒளியில் விரிவாக ஆய்வோம்.

ஒரு முழம் என்தபற்கான ஆரம்பப் புள்ளி எது?

"யார் தனது ஆடையை இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் பார்க்கமாட்டான்" என்று பொதுவாக இறைத்தூதர் கூறியதும் பெண்களையும் இச்செய்தி குறிக்கிறதே எனப் புரிந்து கொண்ட உம்மு சலமா(ரலி) அவர்கள், பெண்கள் தங்களது கீழாடையை எவ்வாறு அணிந்து கொள்ள வேண்டும் என்று வினவுகிறார்கள். அப்போதுதான் மேற்கண்ட செய்தியை இறைத்தூதர் கூறுகிறார்கள்.

- இவ்வாறு உம்மு சலமா கேள்வி கேட்டதன் மூலம், இறைத்தூதரின் காலத்தில் வாழ்ந்த பெண்கள் தமது கீழாடையை கரண்டைகால்களுக்கு கீழாக இறக்கி பாதங்களை மறைத்துக் கொள்ளும் விதத்தில்தான் ஆடையை அணிந்து வந்துள்ளார்கள் என்றே நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

- ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர் கூறிய போது, "பாதங்கள் அப்போது வெளிப்படும்" என உம்மு சலமா (ரலி)அவர்கள் மீண்டும் வினவியது, எதிலிருந்து ஒரு ஜான் இறக்க வேண்டும் என்பற்கான ஆரம்பப்புள்ளியை (Starting Point) உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிந்தே வைத்துள்ளார்கள் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

- ஒரு முழம் இறக்க வேண்டும் என்று இறைத்தூதர் மீண்டும் பதிலளித்த போது, தனது கேள்விக்கு (பாதங்களை மறைக்கும் விதத்தில் கீழாடையை அணிந்து கொள்வதற்கு) விடை கிடைத்துவிட்டதால் உம்மு சலமா மௌனமாகவிடுகிறார்கள். எனவே, 'ஒரு முழம்' என்பதற்கான ஆரம்பப் புள்ளி (Starting Point) நிச்சயமாக முட்டுக்கால்களாக இருக்கவே முடியாது. ஏனெனில், முட்டுக்கால்கள்தான் ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்குமேயானால், நிச்சயமாக பாதங்கள் மறையாது.

 

எனவே, ஒரு ஜான், ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப் புள்ளி எதுவாக இருக்க முடியும்? என்ற இந்தக் கேள்விக்கான விடையை அறிந்து கொண்டால் ஹதீஸ் துறையிலுள்ள இவர்களது அறியாமையை தெளிவாக இனம் கண்டுக் கொள்ளலாம்.


இறைவிசுவாசிகளின் கீழாடை

ஒரு ஆடவன் கீழாடை தனது கரண்டைகால்களுக்கும் கீழாக அணிந்து கொள்ளலாகாது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், எது வரை இறக்கிக் கொள்வது சரியான முறை என்பதற்கான வழிகாட்டலையும் பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.


عن بن عمر قال مررت على رسول الله - وفي إزاري استرخاء فقال يا عبد الله ارفع إزارك فرفعته ثم قال زد فزدت فما زلت أتحراها بعد فقال بعض القوم إلى أين فقال أنصاف الساقين رواه مسلم


"எனது கீழாடை (கரண்டைக்குக் கீழ்) இறங்கிய நிலையில் நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்றேன். அப்போது "அப்துல்லாஹ்வே! உன் கீழாடையை உயர்த்து!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சற்று உயர்த்தினேன். "இன்னும் அதிகம் உயர்த்து" என்றார்கள். இவ்வாறு உயர்த்திக் கொண்டே இருந்தேன்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய போது,

"எதுவரை உயர்த்தினீர்கள்" என அவையிலிருந்த சிலர் வினவினார்கள். "இரு கெண்டைக்கால்களின் பாதியளவு வரை உயர்த்தினேன்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: முஸ்லிம்.


باب موضع الإزار - عن حذيفة قال قال رسول الله - موضع الإزار إلى أنصاف الساقين ..........رواه النسائي ج8/ص206


"அரைக் கெண்டைக்கால்கள்தான் கீழாடை அணிந்து கொள்ள வேண்டிய இடமாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹுஃதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: நஸாயி)

ஹுஃதைஃபா அவர்களது கெண்டைக்காலின் மையப்பகுதியை பிடித்துக் காட்டியவாறே இவ்வாறு கூறியதாகவும் திர்மிதி, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் அஹ்மத் போன்ற பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஓர் இறைவிசுவாசி கெண்டைக்கால்களின் பாதியளவு வரைதான் கீழாடை அணிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அமைந்த அபூ சயீத் அல்குத்ரி, அப்துல்லாஹ் பின் முஃகஃப்ல் போன்ற நபித்தோழர்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்ட நபிமொழிகள் ஏராளமான நூல்களில் பதிவாகியுள்ளன.

ஓர் இறைவிசுவாசி தனது கீழாடையை எதுவரை இறக்கி அணிந்துக் கொள்ள வேண்டும் என்ற இறைத்தூதரின் இந்த வழிகாட்டலையும், உம்மு சலமா (ரலி) அவர்கள் கேள்வி கேட்டு, ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும் என அதற்கு இறைத்தூதர் அளித்த பதிலையும் சரியாக புரிந்து கொண்ட யாரும், பெண்கள் விஷயமாக இறைத்தூதர் கூறிய ஒரு ஜான், ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப் புள்ளி முட்டுக்கால்களல்ல மாறாக, அரைக்கெண்டைக்கால்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி எளிதில் அறிந்து கொள்வார்கள்.


ஏனெனில், முட்டுக்கால்கள்தான் ஆரம்பப்புள்ளியாக இருக்குமேயானால், அதிலிருந்து ஒரு ஜான் இறக்கிக் கொள்ள வேண்டும் எனும் போது பாதங்கள் மட்டுமல்ல, கெண்டைக்கால்களும் சேர்த்தே வெளிப்படும். அப்போது, "கெண்டைக்கால்கள் வெளிப்படுமே" என்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்குமே தவிர, பாதங்கள் வெளிப்படுமே என்று கேட்கப்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல கெண்டைக்கால் வெளிப்படும் போது பாதங்கள் குறித்து கேட்பது அர்த்தமற்ற கேள்வியாகவும் அமையும்.

தொடைகள் வெளியே தெரியும் போது அது குறித்த கவலையை வெளிப்படுத்தாமலும் அதனை மறைப்பது எப்படி என கேள்வி எழுப்பாமலும் பாதங்கள் வெளிப்படுகின்றனவே என்று கேள்வி எழுப்பினால் அது எப்படி கேலிக் கூத்தானதோ, அது போன்றுதுதான் கெண்டைகால்கள் வெளிப்படும்போது அது குறித்து கேள்வி எழுப்பாமல், பாதங்கள் வெளிப்படுகின்றதே என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்று விளக்கமளிப்பது.

அரைக்கெண்டைக்கால்கள்தான் ஆரம்பப்புள்ளி என்ற நமது விளக்கத்தின் படி ஒரு ஜான் இறக்கிக் கொண்டால், கெண்டைக்கால்கள் நிச்சயமாகத் தெரியாது, மாறாக பாதங்கள்தான் வெளிப்படும். எனவே, "பாதங்கள் வெளிப்படுமே" என்ற உம்மு சலமாவின் கேள்வியும் அப்போது அர்த்முள்ளதாக அமையும்.

உம்மு சலமா (ரலி) அவர்களின் இக்கேள்விக்கான பதிலாகதான் பாதங்களை மறைக்கும் விதத்தில் "ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

 

முட்டுக்காலிலிருந்துதான் "ஒரு முழம்" என்றால் நிச்சயமாக பாதங்களை மறைக்காது என்பதுமட்டுமல்ல, கேட்ட கேள்விக்கான அர்த்தமுள்ள பதிலாகவும் அது அமையாது.

எனவே, 'பெண்கள் தங்களது கீழாடையை ஒரு முழம் இறக்கிக் கொள்ள வேண்டும்' என்பதன் ஆரம்பப் புள்ளி (Starting Point) அரைக்கெண்டைக்கால்கள்தான் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். இதே கருத்தைத்தான் ஹாஃபிழ் இப்னு ஹஜர், ஷவ்கானி, திர்மிதி, அபூதாவூத் விரிவுரையாளர் இன்னும் பல அறிஞர்களும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.

 

முன்சென்ற ஹதீஸ் கலை அறிஞர்களான இவர்களது கூற்றை பார்க்க வேண்டாம் என்று மக்களை திசைதிருப்பி தனது கற்பனையை முதன்மைப்படுத்த PJ முனைகின்றார் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.


மேலும், அந்நிய ஆடவர்களின் பார்வையிலிருந்து பெண்கள் தங்களது பாதங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் மற்றும் சுன்னா வலியுறுத்துகின்றன. இவர்களும் கூட தங்களது குர்ஆன் மொழியாக்கத்தின் (முதல் பதிப்பில்) 300 வது விளக்கத்தில் 1069வது பக்கத்தில் 'பெண்கள் தமது உடல் அழகில் கைகள், முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டும்' என்று எழுதி பாதங்கள் மறைக்கப்பட வேண்டியதாகும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.


இந்நிலையில், ஒரு முழம் என்பதற்கான ஆரம்பப்புள்ளி முட்டுக்கால்கள்தான் என்றால் நிச்சயமாக பாதங்கள் மறையாது என்பது வெள்ளிடை மலைபோன்றது எனும் போது இவர்கள் தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு பேசிவருகிறார்கள் என்பதை இதனை வாசிப்போர் புரிந்து கொள்ளவேண்டும்.

இவர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம்

ஒரு முழம் என்பதற்கான ஆரம்பம் முட்டுக்கால்கள்தான் என புரிந்து கொள்ளும் விதத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நபிமொழி ஒன்று உண்டு என்று வாதித்து வழக்கம் போல் மக்களை இவர்கள் ஏமாற்ற நினைக்கலாம். எனவே அது குறித்த விளக்கத்தையும் நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.


عن أبي المهزم عن أبي هريرة عن عائشة أن النبي - قال في ذيول النساء شبرا فقالت عائشة إذا تخرج سوقهن قال فذراع رواه إبن ماجة


"பெண்களின் கீழாடை ஒரு ஜான்" என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, "அவர்களது கெண்டைக்கால்கள் வெளிப்படுமே" என ஆயிஷா (ரலி) வினவினார்கள். "அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளட்டும்" என நபி (ஸல்) அவர்கள் பதிளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: இப்னு மாஜா.

'கெண்டைக்கால்கள் வெளிப்படுமே' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களது கேள்வியின் மூலம், ஒரு ஜான் என்பதற்கான ஆரம்பப்புள்ளி முட்டுக்கால்களாகத்தான் இருக்க முடியும் எனத்தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று வாதித்து வழக்கம் போல் மக்களை ஏமாற்ற இவர்கள் முயற்சிக்கலாம்.

இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்றால்தான் இவர்களது வாதத்தை இதன் மூலம் நிலைநாட்டலாம். ஆனால் இந்த நபிமொழி பலவீனமானதாகும். ஏனெனில், அபுல் முஹஜ்ஜிம் என்பவர் வழியாகவே இது பதிவாகியுள்ளது.

இவர் பலவீனமானவர் என இக்கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். இட்டுக்கட்டக் கூடியவர் என ஹாகிம் தெரிவிக்கிறார்கள். மறுக்கப்படும் செய்திகளைத்தான் இவர் அறிவிப்பார் என இப்னு அதி கூறுகின்றார். மேலும், இந்த நபிமொழி அஹ்மத், முஸ்னத் இஸ்ஹாக் ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது. இந்த நூல்களிலும் அபுல் முஹஜ்ஜிம் என்பவர் வழியாகவே பதிவாகியுள்ளது என்பதால் கெண்டைக்கால் வெளிப்படுமே என்ற இந்த பலவீனமான நபிமொழியைக் காட்டினால் மக்கள் ஏமாந்து விடவேண்டாம் என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.


உண்மையை அறிந்து அதனை செயல்படுத்தக் கூடியவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்க வேண்டும்.
 
- மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
வலைப்பதிவு முகவரி:
http://fazilbaqavi.blogspot.com

மின்னஞ்சல் முகவரி: fazilbaqavi@gmail.com
 

0 comments: