எழுத்தாளர்களின் விஞ்ஞானி சுஜாதா

எழுத்தாளர்களின் விஞ்ஞானி
 
.
 
.
களைப்புற்று வீடு திரும்புகையில் துணுக்குற வைத்தது சுஜாதாவின் அந்திம செய்தி. அயர்வின் உச்சத்தோடு அறைக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்டது "கற்றதும் பெற்றதும்' தொகுப்பு.
.
அழுத்தமான இலக்கியங்களை படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இவைதான் இலக்கியம், இவற்றை மீறி எதுவும் சொல்லிவிட முடியாது என்ற ஒரு கருத்தை கொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக கையில் கிடைத்தது "பிரிவோம் சந்திப்போம்' நாவல்.

கவிதை தனமான தலைப்பாக இருக்கிறதே, வழக்கமான காதல் கதையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தேன். கதையின் களம் என்னவோ கம்பன் முதல் இன்றைய குப்பன் வரை தொடும் காதல்தான். ஆனால் அதன் கட்டுமானம் காளிதாசனின் சாகுந்தலத்தையும், ராகுல்ஜியின் வோல்கா முதல் கங்கை வரை நாவலையும் சமவிகிதத்தில் கலந்திருந்தது.

அட, இத்தனை நாள் சுஜாதாவை படிக்காமல் இருந்துவிட்டோமே என்று தேடி துழாவி அவரது நாவல்கள் அனைத்தையும் கரைத்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு மனிதனின் பால்ய காலம் என்பது அவனது அந்திம பயணம் வரை உடன் வரும் ஒன்று. இதனை உலகின் ஆகப்பெரும் படைப்பாளிகள் அனைவரும் தங்களது படைப்புக்களில் கையாண்டுள்ளனர்.

இதனை சுஜாதாவின் எழுத்துக்களில் எந்தவிதமான படைப்புக்களிலும் நாம் இனம் காண முடியும். ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதையில் வரும் மாந்தர்கள் கோவிந்துவும், பாச்சு மணியும் வேறு யாருமல்ல நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பால்ய கால தோழர்கள் தான்.

காதலிக்கு கடிதம் கொடுக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே ஒரு முழுக் கதையாக மாற்ற முடியும் என்பதற்கு அந்த தொகுதியில் இடம்பெற்ற மாளவிகா கதை ஒரு உதாரணம்.

சுஜாதாவை விதந்தோதும் வாசக வட்டம் கூட அவரது நாவல்கள், சிறுகதை தொகுதிகளோடே நின்று விடுகிறார்கள். தமிழ் இலக்கிய மரபான இயல்,  இசை, நாடகம் என்பதில் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார் தொடங்கிய அத்தியாயம், நடுவில் இருண்ட காலமாய் முடிந்துவிட்டது.

அதனை மீட்டெடுத்தவர்களில் முக்கியமான ஒருவராக சுஜாதாவை கூறலாம். அவரது அங்கத படைப்பான குதிரை ஆகட்டும், சமூக அக்கறையை அடிப்படையாக கொண்டு வைணவ மரபில் படைக்கப்பட்ட மாஞ்சு ஆகட்டும் எந்த விதத்திலும் ஐரோப்பிய நாடகங்களுக்கு குறைவல்ல.

அதேபோன்று கட்டுரை வரிசையில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் ஒரு அகராதியாக போடும் அளவிற்கு பன்முக தன்மை கொண்டதாகவும், செறிவுடனும் அமையப்பெற்றவை.

தீவிர இலக்கியவாதிகள் என்றால் பழமையை நிராகரித்து இலக்கணங்களை உடைத்து புதுமைகளை படைக்க வேண்டும் என்று சிலர் நினைத்து வந்த நேரத்தில், சங்ககால செவ்வியல் படைப்புகளையும், சாமான்யனுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்த முயற்சி தீவிர இலக்கிய வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சி.

ஆனால் அதன் உள்ளடக்கம் குறித்து பல்வேறு விமர்சன கூறுகள் எழுந்ததை நாம் புறந்தள்ள முடியாது. ஆனால் ஒரு படைப்பாளன் எந்த கணத்தில், எந்த படைப்பூக்கத்தோடு ஒரு வரியை எழுதினான் என்பதை அதே தளத்தில் வாசகன் புரிந்து கொள்வதென்பது முடியாத ஒன்று.

கவிஞனுக்கு யானையாக தெரிவது, வாசகனுக்கு மேகமாக இருக்கலாம். அதுபோல புறநானூறு உள்ளிட்ட சங்கப் பாடல்களை தன் பார்வையில் நவீன தமிழ் படுத்தியவர் சுஜாதா.

அதேபோன்று இலக்கிய தரமான படைப்புகளை சுஜாதா படைத்தவர் அல்ல. ஒரு கதையின் கட்டுமானம் சார்ந்து வித்தை காட்டக்கூடியவர் என்று அவர் மீது விமர்சன கணைகளை எழுத்தாளர்களும் பல சமயங்களில் கூறியதுண்டு.

பாரதியின் படைப்புகளையே இந்துத்வ நோக்கோடு பார்ப்பவர்கள் இங்கு பலருளர். இதில் சுஜாதா மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்கள் பார்வையிலேயே சொல்வதாக இருந்தால் கூட நிச்சயமாக ஆகச் சிறந்த இலக்கிய படைப்பு என்று எதையும் சுஜாதா எழுதியவரல்ல.

ஆனால் காலம் காலமாக மொன்ணை எழுத்துக்களோடு முயங்கிக் கொண்டிருந்த கதையோட்டத்தை கூரான உரையாடல்கள் மூலம் செதுக்கியவர் சுஜாதா.

ஒரு முழுநீள பக்கத்திற்கு விளக்க வேண்டிய விஷயத்தை கதாபாத்திரங்களின் ஊடாக ஒரே வார்த்தையில் தெளிவுப்படுத்தும் யுத்தியை தமிழுக்கு கொண்டு வந்தவர் சுஜாதா.

அச்சுக்களில் மட்டுமே இயங்கி வந்த படைப்புகளை இணையத்தில் முதன் முதலில் ஏற்றிய பெருமை சுஜாதாவையே சாரும். காரணம் அவரது கல்வி அறிவு இதற்கு பின்புலமாக இருந்தால் கூட, கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை தான் இதில் முதன்மையாக இருந்தது.

உதாரணத்திற்கு பல சிறு கதைகளை விளம்பர உரையாடல்களை கொண்டும், எஸ்எம்எஸ் தகவல்கள் போலவும் அவர் எழுதியிருந்ததை சொல்லலாம். இவரை பார்த்து அதே மொழி நடையில் எழுத வந்தவர்கள் ஒரு சிலர் என்றால், இவரது தொழில்நுட்ப வழியில் நடைபயின்றவர்கள் பலருளர். இதற்கு உதாரணமாக இணையம் எங்கும் கொட்டிக்கிடக்கும் தமிழ் வலைப்பூக்களை சொல்லலாம்.

வாசகத் தேவை பூர்த்தி செய்து அதன் மூலம் வாசகர் வட்டத்தை பெருக்கிக் கொண்டவர் சுஜாதா என்ற சிறப்பு வசை மொழியும் இவருக்கு சூட்டப்படுவது உண்டு. அப்பொழுதெல்லாம் அதற்கு போர் வாளாக எதிர்பாளர்கள் தூக்கி வருவது சினிமாவில் சுஜாதா என்ன எழுதி கிழித்துவிட்டார் என்ற சொல்லாடல்களைதான்.

சமரசம் செய்து கொள்வது என்பது  தோல்வியை தழுவுவது அல்ல. அது ஒரு போர்முறை என தனக்கு நெருங்கிய நண்பர்களிடத்தில் சுஜாதா கூறிவந்துள்ளார். ஆனால் அதனை ஒருபோதும் தனது எதிர்பாளர்களிடம் அவர் தெரிவித்தது இல்லை.

குழாம் அமைத்து சண்டையிடும் முற்போக்கு இலக்கிய கோதாவில் ஒருபோதும் இறங்கியவர் அல்ல சுஜாதா. ஆனால் அதனை ரசித்து பல இடங்களில் தனது கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.

விகடன், குமுதம் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் தீவிர எழுத்துக்களையும், கணையாழி போன்ற சிற்றிதழ்களில் விஞ்ஞானம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதி வியப்புக்குள்ளாக்கியவர் சுஜாதா.

வாழும் போதே ஒரு கலைஞன் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது பெரும்பாலான கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு வாய்ப்பதில்லை. அந்த வகையில்  எழுத்தாளர்கள் மத்தியிலும், வாசகர்கள் மத்தியிலும் அங்கீகரிக்கப்பட்டவர் சுஜாதா.

எழுத்தாளர்களில் விஞ்ஞானியாய், விஞ்ஞானிகளின் எழுத்தாளராய் இருந்தவர் சுஜாதா.
 
க.அரவிந்த் குமார்

 

 

0 comments: